தமிழக வரலாற்றில் சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழகத்தின் புதுக்கோடை மாவட்ட்த்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும்  சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 

அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர். குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, நாம் பேருந்தைவிட்டு இறங்கி 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். சிரமம் பார்க்காமல் நடந்துசென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட காலத்தின் சமூகப் பதிவுகளை  ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்திவைத்திருப்பதை ரசிக்கலாம்.

அன்னவாயில் என்பது  மருவி `அன்னவாசல்’ என்று அழைக்கப்படுகிறது. அன்னவாசலின் முற்பகுதிதான் சித்தன்னவாசல். `சித்தானம் வாசஹ்’ என்னும் வடமொழி சொற்களிலிருந்து இந்தப் பெயர் வந்தது” என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள். இதற்கு `துறவிகள் இருப்பிடம்’ எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.600 – 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது. 

பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன. குகைக்கோயில்களையும் குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான். இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.

சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை.

இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.

தொடர்புடைய படம்

சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.

தொடர்புடைய படம்

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன. சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.

தொடர்புடைய படம்

தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.

தொடர்புடைய படம்

சித்தன்னவாசலில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதால் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம். முதலில் இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் என கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625-640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640-670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.

தொடர்புடைய படம்

இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையதுஎன்றும் சைனசமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆசீவகத்துறவிகளுடையது எனச்சொல்லும் க. நெடுஞ்செழியன் ஓவியங்களில் காணப்படும் மூன்று ஆண்கள் குளத்தில் நீராடுவது போல் இருப்பதாலும் தலைமுடியை நன்கு வளர்த்திருப்பதாலும் இது சைன துறவுநெறிக்கு முரண்பட்டிருப்பதால் இது ஆசீவக ஓவியங்கள் என்கிறார்.

-கோ.ஜெயக்குமார்

0 Reviews

Write a Review

admin

Read Previous

யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்

Read Next

உத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *