பத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் 1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின் கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த அரண்மனையை விரிவு படுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாபபுரத்தில் கோவில் கொண்டுள்ள விஷ்னுவின் சேவர்கள் என பிரகடனம் செய்தார்.
1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனை கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:
மந்திர சாலைதாய்க் கொட்டாரம்நாடக சாலைநான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)
பத்மநாபபுரம் அரண்மனையானது, பத்மநாபபுரக் கோட்டைக் குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளிமலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.
அரண்மனையின் முகப்புகாண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய மாளிகையாகவிருந்து, காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டு இன்று காட்சியளிக்கும் நிலையை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வரண்மனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.
நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம்.. பிரமாண்டமான அரங்குகளையும் தகதகக்கும் அலங்காரங்களையும் பத்மநாபபுர அரண்மனையில் கிடையாது. ஆனால், அரண்மனைக்கே யுரித்தான செல்வச் செழிப்பை, அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பில் உள்ளது.
பூமுகத்து வாசல்அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதனமை வாசல் பிரமாண்டமானது, மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும்.
ஒன்றிலொன்று வேறுபட்ட 90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.
பொதுமக்களின் பார்வைக்கென, சீனர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சிம்மாசனம், முற்று முழுதாக கருங்கல்லாலான சாய்மனைக்கதிரை, உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
மந்திரசாலை
பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது. தனியே மரத்தால் ஆனது.அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன.எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
மணிமாளிகைமந்திரசாலை யைக் கடந்து படிகளால் கீழே இறங்கி னால் வருவது மணிமாளிகை ஆகும். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3 கிமீ சுற்றுவட்டாரத்திற்குள்ளிருக்கும் அனைவராலும் கேட்க முடியும்.
அன்னதான மண்டபம்அன்னதானக் கூடம். மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையுடைய அன்னதான மண்டபமாகும். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். ஊறுகாயை பேணுவதற்குப் பாவிக்கப்படும் சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்துகிறது.
தாய்க்கொட்டாரம்அன்னதான மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாகும். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய நாற்சார் வீடமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகை களால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகள் காணப்படு கின்றன.
ஹோமபுரம், சரஸ்வதி கோவில்தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியிலே ஹோமபுரம் காணப்படுகிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுகின்றது. இன்றும் கூட நவராத்திரி காலங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
உப்பரிகைஅடுத்துக் காணப்படும் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.முதலாம் மாடியில் மருத்துவக் குண முடைய மரத்தாலான மருத்துவக் கட்டிலொன்று காணப் படுகிறது.
இரண்டாவது மாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
இந்திர விலாசம்மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே, விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திரவிலாசமாகும். அரண்மனையின் மற்ற பகுதிகளைப் போலன்றி இது மேனாட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கதவுகளும் சன்னல்களும் பெரியவை. கூரை உயரமானது. விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப் புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தமை மனதை வருடியது.
நவராத்திரி மண்டபம்இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த நவராத்திரி மண்டபம் பயன்பட்டது. மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது.
தெற்குக் கொட்டாரம்அந்தப்புரப் பெண்களின் பாவனைக்கான நீர்த்தடாகத்தைத் தாண்டிச் செல்ல வருவது தெற்குக் கொட்டாரம் ஆகும். இது அரண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காணப்படினும், அத்தொகுதியின் ஒரு பகுதியாகும். தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங்களைக்கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான மரச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தையுடைய பகுதிகளாகும்.
பாதுகாப்பு அமைப்புபத்மநாபபுரம் அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிகவும் ஒடுக்கமானவை. அவற்றினூடு செல்கையில் ஒருவர் பின் ஒருவராகவே செல்லமுடியும். பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன என்று வரலாறு கூறுவதால், கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைதான் இந்த ஒடுக்கமான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட அதனையே பறைசாற்றுகிறது. வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.
இயற்கை ஒளிஏறத்தாழ 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக் காணமுடியாது. இயற்கை ஒளி முதலாகிய சூரியனின் ஒளியே போதியளவான வெளிச்சத்தை வழங்குகிறது. ஆகையால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரண்மனையின் கட்டுமானம்இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும். எரிக்கப்பட்ட தேங்காய்ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவற்றைக் கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப் பட்டிருக்கிறது.
மலசல கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களின் வழியே கடத்தப்படும் வகையில், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுகளில் ஒளியூட்டுவதற்காகக் கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப்படுகின்றன.
நூதன சாலைஇந்த அரண்மனையும் அருகிலுள்ள நூதன சாலையும் தமிழ்நாட்டிலே காணப்பட்டாலும் கேரள அரசினாலேயே பராமரிக்கப்படுகிறது. தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் சட்டென ஈர்க்கும் வல்லமை படைத்த பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 55 கி. மீ தொலைவிலும் கன்னியாகுமரி யிலிருந்து 35 கி. மீ தொலைவிலும் காணப்படுகிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாட்களில் இவ்வரண் மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். அரண்மனையின் வெளிச்சூழலிலே, சுற்றுலாப் பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அங்கே கேரளப் பாணியை பிரதிபலிக்கும் மரம், புல், ஓலைகளினாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
– கோ.ஜெயக்குமார்
1 Reviews
Nil
சுரங்கப்பாதை பற்றி விரிவாகச் சொல்லுங்கள்