மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

சீனாவுக்கும், மாமல்லபுரத்துக்கும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக உறவு இருந்தது என்பதற்காக சென்னையை சீனா தேர்வு செய்யவில்லை.

சீன அதிபர் ஷி ஜிங்பிங் இன்று சென்னை வருகிறார். இந்தியப் பிரதமர் மோடியும், ஷி ஜிங்பிங்கும் இன்று மாலை பல்லவ மன்னர்களின் கலை படைப்பிடமான மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

இவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மட்டுமே பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரம் இவர்களது சந்திப்பில் இடம் பெறாது.

மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டு தற்போது மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமாகும். பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தபோது சீனாவுடன் நெருங்கிய வர்த்தக உறவை மாமல்லபுரம் கொண்டு இருந்தது.

சீனாவின் சில்க் ரூட்டாக மாமல்லபுரம் 7வது நூற்றாண்டில் திகழ்ந்துள்ளது. அப்போது தெற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி தளமாக மாமல்லபுரம் கடற்கரை விளங்கியுள்ளது.

தற்போது பட்டுப் புடவைகளுக்கு சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்தில்தான் மாமல்லபுரம் உள்ளது. பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பட்டும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சீன துறவி யுவான் சுவாங் கி.பி. 640ல் காஞ்சிபுரம் வந்திருந்தார். அப்போது நரசிம்மவர்மன் காஞ்சியை ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவர் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கியவர். இவரை மாமல்லன் என்றும் அழைத்தனர். இவரது பெயர்தான் தற்போது மாமல்லபுரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடல்மார்க்கமாகத்தான் யுவான் சுவாங் மாமல்லபுரம் வந்திருந்தார்.

பல்லவ மன்னர்கள் சீனாவில் வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்களாக கல்வெட்டுக்கள் சமீபத்தில் அந்த நாட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில் பல்லவ மன்னர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்ததால், மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்தது என்று கூறினாலும், இவற்றையும் கடந்து பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாக சீனாவுக்கு திபெத்தியர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. டெல்லிக்கு எந்த சீன தலைவர்கள் வந்தாலும், மறக்காமல் தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றனர். டெல்லி மற்றும் சில முக்கிய இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் திபெத்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் குறைவுதான்.

மறுபக்கம் இலங்கை அருகில் தானே இருக்கிறது. அச்சுறுத்தல் இல்லையா என்ற கேள்வி எழலாம். அங்கு புத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இணக்கம் இல்லை என்று கூறப்பட்டாலும், சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. கடல் தாண்டிய இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் என்றுமே சீனா தலையிட்டது இல்லை. வர்த்தக உறவுகளுடன் சீனா தன்னை நிறுத்திக் கொள்கிறது.

ஆதலால், சீன அதிபருக்கு சென்னையை தேர்வு செய்வதில் பாதுகாப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கலாம். ஏற்கனவே மாமல்லபுரம் வந்திருக்கிறார் ஷி ஜிங்பிங். இது அவரது இரண்டாவது பயணம். சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் பண்டைய உறவுகளை மீண்டும் சீனா புத்துயிர் பெற வைத்து இருப்பது தமிழர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அந்த வர்த்தக உறவுகளை புதுப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பெரிய அளவில் சீனா வர்த்தக கதவுகளை திறக்க தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என்பது தமிழர்களின் ஆசையாக இருக்கிறது. நிறைவேற்றுவார்களா மோடியும், ஷி ஜிங்பிங்கும்.

0 Reviews

Write a Review

admin

Read Previous

விக்ரம் லேண்டர் என்னவானது?

Read Next

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *