தமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது
- இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக, இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டிற்கான மைக்கரு “கீழடி நம் தாய் மடி” என்பதாகும். மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன. கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் சிகாகோவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு, கீழடியை மையமாக கொண்டு தொடங்கப்படுகிறது. மேலும் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.